இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52% பெண்கள் உள்ள போதிலும், பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இலங்கை 135ஆவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளன.
“பாலினப் பங்களிப்பை வெளிக்கொணர்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடு குறித்த நிபுணர்களின் ஆய்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பாலின சமத்துவமின்மை மற்றும் இலங்கைப் பெண்களின் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய, “ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக இருக்கும் வரை, எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இல்லை” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், பெண்களையும் அவர்களின் நல்வாழ்வையும் பாதுகாக்கும் வகையில் வலுவான சட்டங்களை அமுல்படுத்துவது குறித்தும் அவர் பேசினார்.
மேலும், குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகள் போன்ற பெண்களின் ஊதியம் இல்லாத வேலைகள், அவர்களின் 20களில் அதிகபட்ச தொழிலாளர் வருமானத்தில் 40%க்கு சமம் என்று ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் கூறியுள்ளது.
அதாவது, வருமான மட்டங்களை விட பெண்கள் ஊதியம் இல்லாத வேலைகள் மூலம் அதிகம் பங்களிக்கிறார்கள்.
இலங்கையில் 66% பெண்கள் இணையவழியில் மிரட்டல் மற்றும் ஆபாசமான உள்ளடக்கம் உட்பட துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், 54% பெண்கள் பெரும்பாலும் அலுவலகங்களில், நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் துன்புறுத்தல்களை அனுபவிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
Leave feedback about this