ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணி கிண்ணத்தை வாங்க மறுத்துள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கிண்ணத்தை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அணி கிண்ணத்தை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக் கிண்ண நிர்வாகம் கிண்ணத்தை கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணப் போட்டியில் அப்போதைய இந்திய அணியின் தலைவர் ரோகித் கிண்ணத்தை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய அணியின் தற்போதைய தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, “பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கிரிக்கெட் சபை தலைவரிடமிருந்து ஆசிய கிண்ணத்தை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கிண்ணம் இந்தியா கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்று 09ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
Leave feedback about this