Local News

இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா

தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை ஒடுக்குவதில் தமது வலுவான உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, இலங்கையுடனான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.

இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளால் சீனப் பிரஜைகள் உட்பட இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட பல வெளிநாட்டுச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறித்த அண்மைக்கால அறிக்கைகளைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக சீனா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றங்கள் பாரிய சமூகத் தீங்குகளை விளைவிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சீனா, சட்டத்திற்கு இணங்கச் சந்தேக நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அதிகாரிகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகள் உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து, பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கையில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு மியன்மார், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளுடன் சீனா அண்மைக்காலமாக விரிவான ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் பல குற்றக் கும்பல்கள் அழிக்கப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்ட போதிலும், அதன் விளைவாகச் சில குற்றக் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மேம்பட்ட தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு, மூலோபாய ரீதியிலான புவியியல் இருப்பிடம், ஒப்பீட்டளவில் தளர்வான விசா கொள்கைகள் மற்றும் மக்களின் விருந்தோம்பல் ஆகியவை நாடுகடந்த மோசடி குழுக்களுக்கு இலங்கையை ஒரு இலக்காக மாற்றியுள்ளன. இதன் விளைவாக, இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த விடயம் குறித்து சீனா அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், இலங்கை சட்ட அமுலாக்க முகவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிறது. கூட்டு முயற்சிகளின் பலனாக, 2024 ஆம் ஆண்டில் மோசடியில் ஈடுபட்ட பல சீனப் பிரஜைகள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் 2025 ஆம் ஆண்டில் தொகுதிகளாக மீண்டும் சீனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்களிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, எல்லை தாண்டிய குற்றங்களைக் கையாள்வதில் கூட்டு விசாரணைகள் மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வாறான முயற்சிகள் இரு நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதோடு, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்குச் சிறந்த சூழலை உருவாக்கும் என்றும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video