இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியானது, மே மாதம் 25-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்தநிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (மே 8) நடைபெற்றது. இந்த போட்டியானது பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியிலேயே நிறுத்தப்பட்டு ரசிகர்கள் மைதானத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதனால், ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக இன்று (9) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறும்போது, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, நிலைமையை விரிவாக மதிப்பிட்ட பிறகு, போட்டியின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.