இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களை, இலங்கை கிரிக்கெட் சபை ஊழியர்களாக கருதி, அவர்களிடம் நிறுத்தி வைக்கும் வரி அறவிடும் முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, வரும் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க மற்றும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நிஷான் பிரேமதிரத்ன, மனுதாரர்களான கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்கள் அல்ல என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம், தேசிய மட்டத்திலான கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்கள் என்று விளக்கியுள்ளார், இது தவறானது என்று மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது வாடிக்கையாளர்கள் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட சலுகைகளுக்கு உரியவர்கள் அல்ல என்றும், எந்தவொரு நியாயமான விசாரணையும் இல்லாமல் தனது வாடிக்கையாளர்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்ட முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சொய்சா, நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்து, மனுதாரர்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழியர்கள் அல்ல, மாறாக சுயாதீன சேவை வழங்குநர்கள் என்று சுட்டிக்காட்டினார்.
2022 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டத்தின் கீழ், தேசிய மட்டத்திலான கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்களாகக் கருதி, ஜனவரி 1, 2023 முதல் அவர்கள் மீது நிறுத்தி வைக்கும் வரியை விதிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினை காரணமாக, 2024 நவம்பர் முதல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். அதன்படி, இலங்கை கிரிக்கெட் சபை சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, மனுதாரரின் கோரிக்கைகளை ஆதரிப்பதாகக் கூறினார்.
அதன் பின்னர், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர டி சில்வா, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்ட வீரர்கள் அதன் ஊழியர்களாக விளக்கப்படுவதாகக் கூறினார்.
அதன்படி, அவர்கள் வரி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர், குறித்த மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் வாதங்களை முன்வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.