நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தூர சேவை பயணிகள் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தினமும் அதிகரித்து வருவது கவனிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரவு நேரங்களில் தூர சேவை பயணிகள் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தி, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், கவனயீனமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்துதல் ஆகிய போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக சட்டத்தை அமல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பொருத்தமான இடங்களில் இரவு நேரங்களில் அதிகாரிகள் குழுக்களை நியமித்து, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், பொலிஸ் மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவு அதிகாரிகள் மூலம் வீதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தும் பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்தி சட்டத்தை அமல்படுத்தவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Leave feedback about this