உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (27) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், நாட்டில் இன்னும் ஆபத்தான சூழ்நிலை இல்லை என்றாலும், விமான நிலையப் பகுதியில் ஏற்கனவே தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் சில எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. நாங்கள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தில் நடந்தது போன்ற அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் ஏற்கனவே விமான நிலையத்திலிருந்தே அந்த விடயம் தொடர்பில் தலையிடப்பட்டு வருகிறது.” என்றார்.
இலங்கைக்கு மிக நெருக்கமான நாடான இந்தியாவில் இருந்து புதிய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,009 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த நோயால் 4 பேர் இறந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.