மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகளை இதன்போது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வசதியான வீடு, ஆரோக்கியமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை, இந்தியாவுடன் இணைந்து மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த வீட்டுத் திட்டம், மலையக சமூகத்தினருக்கு ஒரு வீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தாய் நாட்டிற்கு ஆற்றலை வழங்கும் “மதிப்பிற்குரிய பிரஜைகளாக” அவர்களை மாற்றுவதற்கான அடித்தளமாகவும் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். உரிய வழிமுறையின் ஊடாக இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Leave feedback about this