நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுசாகலை லக்கம் தனியார் தோட்டப்பிரிவில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று 29/09/2025 திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் நடந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ள மாணவன் லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் என்பதோடு குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலை சென்று மாலை 5.00 மணியளவில் வீடு திரும்பியுள்ளதுடன் 6.00மணியளவில் பக்கத்து வீட்டார் குறித்த மாணவனை வீட்டின் அருகே கண்டதாக தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் காலையில் வீட்டிலிருந்து அலுவல் காரணமாக நுவரெலியா சென்று வந்த தந்தை 7.00 மணிவரை மகனை காணவில்லை என்பதால் தேடத் தொடங்கியுள்ளார், அப்போது ஊர் முழுவதும் தேடிவிட்டு தனது வீட்டின் சமையலறைக்கு அருகில் உள்ள இருட்டு அறையில் தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் உடனடியாக மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் புஸ்பகுமார உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவம் தொடர்பாக விசாரனைகளை ஆரம்பித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில், இன்று காலை SOCO பொலிஸ், திடீர் மரண விசாரனை அதிகாரி, ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் வந்து நேரடியாக பார்வையிட்டு அதனடிப்படையில் விசாரனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அதுவரை மஸ்கெலியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் இருப்பார்கள் எனவும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி புஸ்பகுமார கருத்து தெரிவித்தார்.
மேலதிக விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணைகளை முன்னெடுகப்போவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
Leave feedback about this