Crime and Threats Local News

மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் போதைப்பொருள் அடிமைத்தனம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை பெறும் நிலையில், கிராண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனிவீதி, அங்குலான, வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவ உள்ளிட்ட பல நகரங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பிள்ளைகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகுவதாக அந்த சபை மேலும் கூறியுள்ளது.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் இடையே போதைப் பழக்கத்திற்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக கண்டி மாவட்டத்தை சேர்ந்த சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது.

நண்பர்களின் அழுத்தமே பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு உள்ளாகும் முக்கிய காரணியாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பாடசாலைகளில் போதைப்பொருள் கொள்கைகள் செயல்படுத்தப்படாதது, பாடசாலையில் போதைப்பொருள் தடுப்புக் கொள்கையை அமுல்படுத்துவதில் அதிபர்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள் ஆர்வம் காட்டாதது ஆகியவை பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதற்கான காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், சிதைந்த குடும்பச் சூழலில் மன அழுத்த சூழ்நிலைகள், குழந்தைகளைப் புறக்கணித்தல், குடும்பம் மற்றும் வசிக்கும் பகுதியில் போதைப்பொருட்களின் பரவல், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, சர்வதேச தரத்தின்படி உள்ளூர்மயமாக்கும் 6 பிரிவுகள் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, பாடசாலை அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, குடும்ப அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, பணியிட அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் அடிப்படையிலான போதைப்பொருள் கல்வி பயிற்சி அல்லது போதைப்பொருள் கொள்கை உருவாக்கம் மற்றும் ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய பிரிவுகள் மூலம் அவை செயல்படுத்தப்படுகின்றன.

மேலும், போதைப்பொருள் தடுப்பு சோதனைகள், மதிப்பீட்டு சோதனைகள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான பிள்ளைகளை தொடர்ச்சியான படிப்புக்கு பரிந்துரைத்து, ஆலோசனை, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் பின் பராமரிப்பு சேவைகள் மூலம் மீட்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை செயல்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளான பாடசாலை மாணவர்களை மீட்பதற்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை செயற்பட்டு வரும் அதேநேரத்தில், இந்த நோக்கத்திற்காக, சோதனைக்கு பின்னர் மூன்று முறைகளில் செயற்படுவதற்காக பாடசாலை ஆலோசகர் ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த அவதானமுள்ள மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் தலையீடு முதல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டாவது முறையில் நடுத்தர ஆபத்துள்ள மாணவர்களை கண்டறிதல் மற்றும் அதிக ஆபத்துள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாகும்.

இறுதி கட்டமாக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் இளைஞர் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று அவர்கள் விரும்பியபடி பாடசாலை கல்வி அல்லது தொழிற்கல்விக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 31 வரை போதைப்பொருள் குற்றங்களுக்காக 206 பிள்ளைகளை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

இவர்களில் 39 பிள்ளைகள் நன்னடத்தையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிள்ளைகளை போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாக்கியமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிள்ளைகள் போதைப்பொருட்களுக்கு ஆளாவதை தடுக்க இலங்கை பொலிஸார், பாடசாலை மற்றும் உரிய நிறுவனங்களில் 15,652 செயற்திட்டங்களை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video