Accident Local News

ரம்பொடை – கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – சாரதி மட்டுமே பொறுப்பல்ல, ஆய்வறிக்கை தகவல்!!!

கொத்மலை, ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (NC-1144) பேருந்து, கடந்த 11ஆம் திகதி அதிகாலை 4.45 மணியளவில் நுவரெலியா-கண்டி வீதியில் உள்ள கெரண்டிஎல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் காயமடைந்தனர். விபத்தில் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த, கதிர்காமம் டிப்போவில் பணிபுரியும் 43 வயதுடைய சாரதியும் உயிரிழந்தார்.

விபத்து குறித்து 6 பேர் கொண்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. இவர்கள் விபத்து நடந்த இடத்திற்கும், கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்தனர்.

சுற்றுச்சூழல் மற்றும் வானிலை, வீதியின் தன்மை, விபத்து நடந்த இடத்தில் வீதியின் அமைப்பு மற்றும் சாரதியின் உடல்நலம் மற்றும் சட்டபூர்வதன்மை ஆகியன தொடர்பில் குறித்த குழு அவதானம் செலுத்தியுள்ளது.

தொடர்புடைய விசாரணை அறிக்கையின் முடிவுக்கமைய, சம்பந்தப்பட்ட பேருந்து சாரதி தேவையான ஓய்வு இன்றி நீண்ட நேரம் பேருந்தை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.

நான்கரை மணி நேர பயணத்திற்கு, குறைந்தது அரை மணி நேரமாவது ஓய்வு தேவை என்று ஆய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், பெறப்பட்ட தகவல்களின்படி, சாரதி வெலிமடை பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் ஓய்வெடுத்துள்ளார்.

அதன்படி, விபத்து நடந்தபோது சாரதி ஆறரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பேருந்தினை செலுத்திச் சென்றுள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட சாரதி மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளை மீறியதாக விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது. இருப்பினும், விபத்துக்குக் காரணமான அனைத்து காரணிகளுக்கும் சாரதி மட்டுமே பொறுப்பல்ல என்பதையும் விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video