நுவரெலியா கண்டி பிரதான வீதியில் கொத்மலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது.
இப் பேருந்து விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த ஒவ்வொருவர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களுக்காக தனது இரங்கலைத் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
“இந்தச் செய்தியைக் கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதோடு, இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.”
விபத்துக்குள்ளான பேருந்தின் பாகங்கள் பள்ளத்திலிருந்து மீட்டெடுத்து கொண்டுவரப்பட்டுள்ளன.
பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கிரேன் உதவியுடன் இந்தப் பேருந்தின் பாகங்களை மீட்டுள்ளனர்.
பின்னர் குறித்த பேருந்து பாகங்கள், மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணைகளில், விபத்தில் காயம் அடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில் சுமார் 60 முதல் 70 பேர் வரை பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்ட இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.