Local News

வரவு செலவு திட்ட உரை எதிர்வரும் நவம்பரில்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் இன்று (11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று (11) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக செப்டெம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் 2025 நவம்பர் 7ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டுக்காக (வரவு செலவுத்திட்ட உரை) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 8ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை 6 நாட்கள் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய நவம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும்.

குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் மு.ப 9.30 மணிக்கும், ஏனைய நாட்களில் மு.ப 9.00 மணிக்கும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய இக்காலப் பகுதியில் நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு மேலதிகமாக வாய்மூல விடைக்கான ஐந்து கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்வி ஒன்றுக்காகவும் நேரத்தை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் பி.ப 6.00 மணிவரையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்துவதற்கும், வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் பி.ப 6.00 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதியை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 50:50 என்ற அடிப்படையில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகளுக்காக ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video