பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்ததால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லை நகரங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக தரம்சாலா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் Blackout செய்யப்பட்டன. இதனால் பாதியிலேயே போட்டி நிறுத்தப்பட்டது.
பதற்றம் தொடர்ந்து நிலவி வருவதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. பின்னர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் சூழ்நிலையை மதிப்பீடு செய்து மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தணிந்து மே மாதம் போட்டிகளை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் போட்டியை நடத்த தென்இந்தியாவில் உள்ள பெங்களூரு, சென்னை, ஐதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள தைானங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த மைதானமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.
ஐதராபாத்தை சொந்த மைதானமாக கொண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஏறக்குறைய வெளியேறும் நிலையில் உள்ளது. பெங்களூருவை சொந்த மைதானமாக கொண்ட ஆர்சிபி பிளேஆஃப் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது.
இன்னும் 12 லீக் போட்டிகள் (இடைநிறுத்தம் செய்யப்பட்ட பஞ்சாப்- டெல்லி போட்டி உள்பட) நடைபெற இருக்கிறது. அதன்பின் பிளேஆப் சுற்று போட்டிகள், இறுதிப் போட்டிகள் என 4 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.