மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கவுள்ள இப்படம் குறித்து கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து, இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
மேலும், ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், வெற்றிமாறன் உள்ளிட்டோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கும் ‘கலாம் – தி மிஷைல் மேன் ஆஃப் இந்தியா’ என்ற அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தனுஷ், ‘உத்வேகம் மற்றும் பெருமைமிக்க தலைவரான நமது அப்துல் கலாம் ஐயாவின் வாழ்க்கையை சித்தரிப்பதில், நான் உண்மையிலேயே பாக்கியவானாக உணர்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமையவுள்ளதாக கூறப்படுகிறது.