Local News

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து கோரல் நாளை முதல் ஆரம்பம்!

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

இருப்பினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தத்திற்கு அமைவாக கட்டண அதிகரிப்பு காணப்பட்டாலும், இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மின்சார கட்டணத்தை விட இது குறைவாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை மின்சார சபை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக விமலரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்மொழியப்பட்ட புதிய திருத்தத்தின் படி, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என்றாலும், இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்த மின்சாரக் கட்டணத்தை விட இது குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-2022 காலகட்டத்தில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்கான செலவுகள் அதிகரித்த போதிலும், மின்சார கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அந்தக் காலகட்டத்தில் எரிபொருள் விலைகள், நிலக்கரி, உதிரிப்பாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகளும் தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *