பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகம், பலாத்காரம் மற்றும் பிற தவறான செயல்களைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
சமீபத்தில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற சம்பவங்கள் அன்றாடம் ஊடகங்களில் பதிவாகி வருவதாகவும், இவற்றைத் தடுக்க சம்பிரதாய முறைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக உடனடியாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் மற்றும் பிரதமரிடம் (கல்வி அமைச்சர் என்ற முறையில்) இது தொடர்பாக துஷ்பிரயோகம் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான பொறிமுறைகளை உருவாக்குமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
“பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும். இந்தக் கடமையை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது கொள்கை வகுப்பாளர்களாகிய நமது பொறுப்பு,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.