Crime and Threats Local News

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலை சம்பவம் : ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று (09) மாலை தெரிவித்ததாவது, இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் ‘பி’ அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சில தரப்பினர் தமது பணி பொறுப்புகளை புறக்கணித்திருக்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக அமைச்சினால் உள்ளக விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *