டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
ஜீன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, அணியின் மற்றொரு முக்கிய ஜாம்பவானான விராட் கோலியும் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பிசிசிஐ அவரது முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில், விராட் கோலி இன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்கள் அடித்தது ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.