Accident Local News

நானு ஓயாவில் எண்ணெய் தாங்கி ஊர்தி குடைசாய்ந்ததில் விபத்து : சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு

கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை எண்ணெய் தாங்கி ஊர்தி கவிழ்ந்ததில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சுமார் 13,000 லீற்றர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த எண்ணெய் தாங்கி ஊர்தியில் பெட்ரோல் 13,800 லீட்டர் மற்றும் டீசல் 13,200 லீற்றர் ஏற்றிச் சென்ற போது ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய வீதியில் உள்ள கிளன்ட்ரானன் தோட்ட பகுதியில் வைத்து , ​​ வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் கசிந்த நிலையில் பிரதேச மக்கள் அதை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

விபத்து நடந்த நேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக, அதிக அளவு எரிபொருள் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கும், விபத்துக்குள்ளான இடத்திற்கு கீழே உள்ள பல தேயிலைத் தோட்டங்களிலும், தோட்டத் தொழிலாளர்கள் குடிநீர் பெறும் பகுதிகளுக்குள்ளும் கலந்துள்ளது.

கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு வளாகத்தின் அதிகாரிகள், விபத்துக்குள்ளான பவுசரில் மீதமிருந்த எரிபொருளை, வேறு எண்ணெய் தாங்கி ஊர்திகளைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரதான வீதி மற்றும் நீர் ஆதாரங்களில் எரிபொருள் கலந்துள்ளதால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *