முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர்.
இதற்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஏற்கனவே படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளைச் சுட்டிக்காட்டி, இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரது எதிர்ப்பை அடுத்து, நேற்று (29) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது. ரவிகரன் தனது கருத்தில், “ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், விமானப்படை மீண்டும் இக்காணிகளைக் கோருவது பொருத்தமற்றது. கேப்பாப்புலவில் இன்னும் 190 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. மக்கள் தொடர்ந்து போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.
யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகியும், விமானப்படையினர் மக்களின் காணிகளை அபகரித்து யாருடன் போர் செய்யப்போகின்றனர்? எனவே, இக்காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது,” எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

Leave feedback about this