Radio Raaga Local News எல்ல – இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம்
Local News விபத்துகள்

எல்ல – இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம்

பதுளை, எல்ல – வெல்லவாய வீதியின் எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த இடங்கள் தொடர்பில் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் S.S. ஹேன்னாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த வீதிகளின் இருபுறங்களையும் பாதுகாப்பான முறையில் மீளக் கட்டமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் 26 கிலோமீட்டர் தூரம் கொண்ட வீதி மீள்கட்டமைக்கப்படவுள்ளதாக, பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் S.S. ஹேன்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தமது முகநூல் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஒளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள்குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை எல்ல – வெல்லவாய வீதியின் 24 ஆவது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின் பின்புறத்தில் பேருந்து மோதி, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியை உடைத்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பேருந்து ஒன்றே இந்த விபத்தில் சிக்கியது.

32 பேர் பயணித்த இந்தப் பேருந்தில் 15 பேர் உயிரிழந்தனர்.காயமடைந்தவர்களில் 13 பேர் இன்னும் பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version