Radio Raaga Local News தாங்க முடியாத அளவு எரிபொருள் விலை அதிகரிக்கும்?
Local News

தாங்க முடியாத அளவு எரிபொருள் விலை அதிகரிக்கும்?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்தால், எதிர்வரும் மே மாதத்தில் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே, எரிபொருள் பயன்பாட்டைத் தாமாகவே முன்வந்து மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (22) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாவும் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறுகையில், உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கப்பல்களுக்கான பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாக, இலங்கையின் எரிபொருள் விலையிலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

எதிர்கால நிலைமை குறித்து யாராலும் எதிர்வுகூற முடியாது. இருப்பினும், அடிக்கடி விலை அதிகரிப்புகளைச் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.

நிலைமை ஓரளவு சீராகும் என்பதே எமது நம்பிக்கை. ஒருவேளை அவ்வாறு சீராகாவிட்டால், மே மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள விலைத்திருத்தத்தின் போது, மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிலான விலை அதிகரிப்பைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version