Radio Raaga Local News பாடசாலை மாணவர்களுக்கு ஆபாசக் காணொளி காட்டிய நபர் கைது
Local News

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாசக் காணொளி காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார்.

பாடசாலை செல்லும் 11 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குச் சந்தேக நபர் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்ததாக, நானுஓயா பகுதியில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ள பொலிஸார், நானுஓயா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரை இன்று (21) நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

நானுஓயா பொலிஸ் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பி.எஸ். சஞ்சீவனி (2435) மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து, நானுஓயா பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போதே இவ்வாறான முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த 06 மாணவிகள், சட்ட வைத்திய அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) பரிசோதனைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நானுஓயா பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version