Radio Raaga Local News QR முறைகேடுகளில் ஈடுபட்ட 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம்
Local News

QR முறைகேடுகளில் ஈடுபட்ட 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம்

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமையில் இதுவரை சுமார் 60 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். இதன்படி, சுமார் 20 இலட்சம் பேர் புதிதாகப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

QR முறைமையில் பதிவு செய்ய முடியாது எனப் பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்குமான தொழில்நுட்பக் குறைபாடுகள் இதுவரையில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, எரிபொருள் நுகர்வை இயன்றவரை மட்டுப்படுத்துமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலதிகமாகக் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, QR குறியீட்டை சட்டவிரோதமான முறையில் தரவிறக்கம் செய்த 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Exit mobile version